குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும். ***** ***** அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். ***** ***** மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற. ***** ***** நீரின் றமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின் றமையாது ஒழுக்கு

இணையத்தளப் புரவலர்
தமிழ்த்திரு. நா.நாச்சிமுத்து ஐயா அவர்கள்
தேவத்தூர்.

செயலாக்க நெறியாளர்: தென்மொழி.கல்லை.அருட்செல்வன்.

 

 

 

தொடரும் தென்மொழிப் பணி!


இந்தியும் இந்தியமும் தமிழையும் தமிழினத்தையும் அழிக்கவல்லது என்றுணர்ந்து, தமிழ் மக்களுக்குச் சென்ற நூற்றாண்டுத் தொடக்கத்திலேயே விழிப்புணர்வூட்டி எச்சரிக்கைப் படுத்திய அறிஞர்கள் பலர். அதில் தமிழ்க்காப்பிற்காக எழுச்சியுற்ற முதற்போராட்டம்தான் இந்தியெதிர்ப்புப் போராட்டம்.

 

எழுபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் எழுந்த இந்தித்திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்த தமிழ் இயக்கங்களுடனேயே தன்மானம், பகுத்தறிவு என்ற பெயர்களில் தோன்றிய திராவிட இயக்கங்கள் தங்களின் கொள்கைகளையும் இந்தியத்திற்கு எதிராகத் திருப்பியதால் அனைவரும் ஒன்றிணைந்து தனிநாடு கோரிக்கையை முன்வைத்தனர்.


தமிழ்மக்களின் மொழி இன நாட்டுத் தனித்தன்மையை இந்திய வல்லாளுமையினின்று தடுத்துக் காத்துக்கொள்ளவே தனிநாடு கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது.


திராவிட இயக்கம் மேடைப்  பேச்சிலும், கலையுலகக் காட்சியிலும் தமிழுணர்வை - பண்பாட்டை வெளிப்படுத்திக் காட்டியதால் தமிழ்மக்கள் அவ்வியக்கம் மிகவும் காப்பானது என நம்பிப் பெருமளவில் அதன்கீழ் ஒன்றிணைந்தனர். இந்தியாவிலேயே இந்தியத்தை எதிர்த்து - பேராயக் கட்சி ஆட்சியை எதிர்த்து, ஒரு மாநிலக் கட்சி முதன்முதலில் ஆட்சியைப் பிடித்தது தமிழ்நாட்டில்தான். திராவிட இயக்கம் கட்சியாகி அரசியலில் ஆளுமைபெற்று - ஆட்சிபெற்றுப் பல திராவிடக் கட்சிகளாகக் குட்டிபோட்டுப் பெருத்துப் பரவி நிற்பதற்குத் தமிழ்மக்களின் அளவற்ற நம்பிக்கைதான் அடிப்படையாக நிற்கிறது.


தமிழையும் தமிழினத்தையும் இந்திய வல்லாளுமை அழித்துவிடும் என்கிற அச்சத்தினால் திராவிட இயக்கத்தில் மக்கள் அடைக்கலம் புகுந்தனர். ஆனால் அந்த இந்தியத்துடனேயே தோள்சேர்ந்துகொண்டு, எல்லாக் கொள்கைகளையும் கைநெகிழ்த்து நிற்கின்றன திராவிடக் கட்சிகள்.

 

திராவிடக் கட்சிகள் ஆட்சிபெற்று 66 ஆண்டுகளுக்குப்பின்னும் அன்றைய நிலையோடு ஒப்பிட்டுச் சீர்தூக்கிப் பார்த்தால், ஆரியம் முன்னிலும் அதிகமாகக் காலூன்றித் தன் வல்லாளுமைப் பரப்பைப் பேரளவில் வலுப்படுத்திக் கொண்டுள்ளது. தமிழ்மக்களின் தமிழுணர்வு மழுக்கப்பட்டு, தமிழ்வழிக் கல்வி புறக்கணிக்கப்பட்டு, எங்கும் எதிலும் தமிழில்லாமல் அகலமான நாற்கரச்சாலை வழியாகவே ஆரவாரத்தோடு இந்தியும் அதனோடு இந்தியமும் தங்குதடையில்லாமல் நுழைவதற்குத் தமிழகத்திலிருந்து சென்ற நடுவண் அமைச்சர்களே கம்பளம் விரிக்கும் கைநெகிழ்ப்புப் பணியைச் செவ்வனே செய்யக் காண்கிறோம்.


வடநாட்டிலிருந்து ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் கூலிகளாகவும், குடும்பங்களாகவும் வடமாநில மக்கள் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டு, தமிழ்நாடு என்ற பெயருக்கே பொருளில்லாமல் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் தமிழர்களே இல்லாமல் போகும் நிலை வந்தாலும் வியப்பதற்கில்லை.

 

மொழி - இன - நாட்டுணர்வைத் தமிழ் மக்களிடையே மீட்டெடுக்கும் பணியைத் தென்மொழி எனும் இச் சிற்றிதழ்க் கருவி தொடர்ந்து செய்து வருகிறது. நம் பாவலரேறு ஐயாவால் தொடங்கப்பட்டு, அவர்தம் வாழ்நாள் முழுவதும் அயராது செய்த அரும்பணிக்காகத் துணையாகக்கொண்ட கருவிகளுள் ஒன்றான ‘தென்மொழி’ இதழ் வழியே அப் பணியைத் தொடர்ந்து செய்து கொண்டுள்ளோம். இன்னும் சில சிற்றிதழ்களும் இயக்கங்களும் இதே கொள்கையை முன்னெடுத்து இப் பணியை உண்மையுடன் தங்களால் இயன்றவரை செய்து வருகின்றன.


ஓர் இல்லத்திற்குச் செல்லும் தென்மொழியைக் குடும்பத்தலைவர் மட்டுமே படித்துவிட்டு மிசைமேல் கிடந்துவிடாமல், குடும்பத்தலைவியும், பிள்ளைகள் அனைவரும் ஆர்வமுடன் படிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அதற்கு ஏற்றவாறான மாற்றங்களைச் செய்ய முனைந்துள்ளோம்.

 

அரசியல், அறிவியல், உலகச்செய்திகள் அனைத்தும் நல்ல தமிழில் இடம்பெறவும்,  அச் செய்திகளுடனேயே அவர்கள் தாய்மொழியுணர்வு பெறவும் தன்னிலை அடையாளங்கள் மாறாது, உலகத்தில் அங்குமிங்கும் ஓடிச்சென்று அடிமைப்பணி செய்யாது தன்மானத் தமிழர்களாக வளர்ந்து உலகத்தில் உயர்தமிழ் மாந்தர்களாக நிற்கவேண்டும் என்னும் உணர்வை ஒவ்வோர் இல்லத்திலுமுள்ள இளைஞர்களிடையே விதைத்து இனத்தை மீட்டெடுப்பதே தென்மொழியின் குறிக்கோள். அதற்காகப் புதிய வடிவங்களில் செய்திகளை விரிவாக்கி, பக்கங்களைக் கூட்டி புதிய பொலிவுடன் தென்மொழி உங்கள் கைகளில் தவழ்கின்றது.


ஐம்பது ஆண்டுகளுக்குமேல் தொடர்ந்து நடையிட்டுவரும் தென்மொழி, பதிவுநிலைக்காகச் சில மாற்றங்கள் பெற்றுத் தொடர்ந்து வெளிவருகிறது. தென்மொழியின் இந்த உயரிய குறிக்கோளின் வளர்ச்சிக்காகத் தென்மொழியை முயன்று பரப்பவேண்டும் என்று தென்மொழியைத் தொடர்ந்து படித்துவரும் அன்பர்களையும் ஆர்வலர்களையும் நன்றியுடனும் உரிமையுடனும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.        

  -மாகுன்றன்