இத் தளம் – தமிழில்
இத் தளம் பற்றி
திருவள்ளுவராண்டு 1990 (கி.பி. 1959)இல்
தென்மொழி
ஓர் இலக்கிய இதழாக மலர்ந்தது!
கொள்கை இதழாகச் சிறந்தது!
இதழே இயக்கமாக எழுந்தது!
தூய மொழிநடையில் — தனித்தமிழில்
புதுமுறை இலக்கியங்களையும்
மொழி, கலை, அறிவியல், பண்பாடு, வாழ்வியல் எனப்
பல்துறைசார்ந்த அரிய ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டு,
மொழிக்கலப்பு எனும் இழிவார்ந்த அழிவுநிலையிலிருந்து மீட்டு,
மொழிக்காப்பு எனும் ஒளியார்ந்த தெளிவுநிலையில்
நம் செந்தமிழை — செம்மொழியை விளங்கச் செய்தது!
தனித்தமிழியக்கம் கண்ட தமிழ்க்கடல் மறைமலையடிகளாரையும்
அதனைப் பேணி வளர்த்த மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரையும் அடியொற்றி
மொழிமீட்சிக்கு அரும்பாடாற்றிய ‘தென்மொழி’ இதழை நிறுவியவர்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
தென்மொழியோடு
தமிழ்ச்சிட்டு எனும் சிறுவர் இதழையும்
தமிழ்நிலம் எனும் அரசியல் இதழையும்
பெருந்தொல்லைகளுக்கிடையே சற்றும் தளராது நடத்திவந்தார்.
தமிழர்
மொழியால்–இனத்தால்–நிலத்தால்
அடிமையுற்றிருக்கும் மிடிமை நிலையினைத் தெளிவுறுத்தி
அதனினின்று மீண்டாக வேண்டும் என்ற மனவுணர்வினையும்
செயலெழுச்சித் தூண்டலையும் ஊட்டி
எண்ணிலா இடையூறுகளுக்கிடையே
தம் வாழ்நாள் இறுதி(1995) வரை தொண்டாற்றினார்.
உணர்வூட்டம் பெற்ற தமிழ்ச்சான்றோர், அறிஞர் சிலரும்
தனித்தமிழ் இதழ்கள்வழி தமிழர்க்கு வழிகாட்டினர்–வழிகாட்டி வருகின்றனர்.
தென்மொழி தன் கொள்கைநோக்கில் தாழாது
தன் பணியைத் தொடர்ந்து ஆற்றிவருகிறது!
அரசோ செல்வரோ அளிக்கும் பொருளுதவி ஏதுமின்றி
நேயமிக்க ஆர்வலர் துணையோடு தன்னலம் கருதாது
தமிழ்க்குடிக்குத் தொண்டாற்றும்
தென்மொழி இயக்கம் பற்றிய செய்திகள் அனைத்தையும்
எதிர்வரும் தலைமுறையினர்க்கும் கொண்டுசெல்ல வேண்டுவது
ஓர் இன்றியமையாப் பணியாகும்.
இப் பணியை மேற்கொள்ளும் பொருட்டு
தேவத்தூர்,
மணிமேகலை இளங்கோ மேனிலைப் பள்ளித் தாளாளரும்
சட்டப் பேரவை மேனாள் உறுப்பினருமான
தமிழ்த்திரு நா.நாச்சிமுத்து ஐயா அவர்கள்
பாவலரேறு பெருஞ்சித்திரனார் நிறுவிய இதழ்களையும்
மாணவர் களம், தழல் இதழ்களையும் காட்சிப் படுத்துவதற்காக
இந்தத் தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளார்.
இப் பேரறிவுச் சுரங்கத்தைப் பயன்கொள்க!
பிறவிப்பயன் பெறுக!
Leave a Reply