பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் “பெரியார்” நூல் ஒரு பார்வை மா. பொழிலன்

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பெரியார் நூல் ஒரு பார்வை  –   மா.பொழிலன்

மா. பொழிலன்:  pozhilantamizh@gmail.com

பாவலரேறு  ஐயா பெருஞ்சித்திரனார்  அவர்களின்  எழுத்தாற்றல், நூலாக்கங்கள் குறித்தெல்லாம் மணிக்கணக்காக, நாள் கணக்காகப் பேசிக் கொண்டிருக்கவும், எழுதிடவும் இயலும்.
அதே போல் மறு அச்சாக்கம் செய்யப்பெற்று அண்மையில் வெளிவந்துள்ள ஐயா அவர்களின் நான்கு நூல்களுள் செயலும் செயல் திறனும், ஓ…ஓ.. தமிழர்களே!, சாதி ஒழிப்பு  குறித்தெல்லாம் விரிவாக, அறிந்திட ஏராளமான செய்திகள் உள்ளன.
இந்நிலையில், ஐயா அவர்கள் ‘பெரியார்’ குறித்து எழுதிய கட்டுரைகள், பாடல்களின் தொகுப்பாகவே இந்நூல் வெளி வந்துள்ளது.
அண்மையில் பெரியார்  படத்தைத் தீயிட்டுக் கொளுத்தவும், அவர் படத்தின் மீது சிறுநீர் பெய்து இழிவுபடுத்தியதுமான நிகழ்வுகள் நடைபெற்ற சூழலில் பெரியார் குறித்து அறிய வேண்டுவதும், ஆய்வு செய்ய வேண்டுவதும், இன்றியமையாததாகவே எண்ணுகிறோம்.
பெரியாரின் படத்தைச் சில நாள்களுக்கு முன்னர் எரித்தவர்கள் ஆரியப் பார்ப்பனர்களோ வைதீகக் கருத்துடைய வர்களோ மட்டும் அல்லர்; தமிழ்த்தேசம் தேவை என்பதாகக் கூறிக் கொண்டிருப்பவர்கள் சிலரும்  அவ்வாறு செய்துள்ளனர்.
அப்படியானால் தமிழ்த்தேசக் கருத்துடையவர்களுக்கு பெரியார் தேவையற்றவரா?  பகைவரா?
பெரியாரால்தான் தமிழ்த்தேசம் சிதைந்ததா? தமிழ்த்தேசம் எழுச்சி கொள்ளாததற்குப் பெரியாரின் கொள்கைளும் கருத்துகளும் தாம் காரணங்களா?
இவை குறித்துச் சிந்திக்க வேண்டிய, தெளிந்தறிய வேண்டிய  தேவை இப்போது ஏற்பட்டுள்ளது.
“பெரியார் நம்மிடைப் பிறந்திரா விட்டால்
நரியார் நாயகம் இங்கே நடந்திடும்” என்றும், பெரியார் மறைவுற்ற போது,
“பெரும்பணியைச் சுமந்த உடல்
பெரும் புகழைச் சுமந்த உயிர்
‘பெரியார்’ என்னும்
அரும்பெயரைச் சுமந்தநரை
அழற்கதிரைச் சுமந்த மதி
அறியாமை மேல்
இரும்புலக்கை மொத்துதல் போல்
எடுக்காமல் அடித்தஅடி!
எரிபோல பேச்சு!
பெரும்புதுமை! அடடா – இப்
பெரியாரைத் தமிழ்நாடும்
பெற்ற தம்மா!”
என்ற வகையில் நீண்டதொரு பாடலும் எழுதினார் பாவலரேறு.
“பெரியார் பேசிய பேச்சுகளை ஏதென்சு நிகரைச் சுற்றி வந்த சாக்ரடீசும் பேசியிருக்க முடியாது. உலகப் பெரும் பேச்சாளர் என்று பெயரெடுத்த தொமசுத்தனிசும் பேசியிருக்க முடியாது. அவர் சுற்றிய தொலைவைக் கிரேக்க மாமன்னன் அலெக்சாண்டரும் சுற்றியிருக்க முடியாது. அவர் பிரெஞ்சு மாமறவன் நெப்போலியனை விடப் போரிட்டார். உருசிய இலெனினை விடப் பொதுமக்களை நேருக்கு நேராகக் கண்டு பேசினார்.”
– என்றெல்லாம் விரிவாகச் சிறப்பித்து எழுதியுள்ளார் பாவலரேறு.
‘திருவள்ளுவருக்குப் பிறகு தமிழினத்தை மீட்க வந்த தலைவர்களுள் பெரியாரே குறிப்பிடத் தக்கவர்.’
என்பதாகப் பாவலரேறு ஐயா அவர்கள் பல கூட்டங்களில் பேசியுள்ளார்.
இக் கருத்துகளெல்லாம் ஏதோ போகிற போக்கில் உணர்வு வயப்பட்டு ஐயா அவர்கள் கூறிவிட்ட கருத்துகள் அல்ல.
பெரியாரின் மொழியியல் கருத்துகளில் சில பொழுது அவர் பேசிய சில தவறான கருத்துகளைப் பாவலரேறு கடுமையாக அப்போதே அதாவது பெரியார் இருக்கும்போதே நேருக்கு நேராகச் சாடியுமிருக்கிறார்.
“பெரியார் குமுகாயச் சீர்திருத்தத்தில் -பிராமண
சூத்திரப் பெரும் போராட்டத்தில் பெரியார்
தாம்! அதில் ஐயமில்லை. ஆனால் தமிழ்மொழி
பற்றியோ, தமிழர் வரலாறு பற்றியோ பிற
அறிவியல் செய்திகளைப் பற்றியோ பேசுவதில்
அவர் சிறியாரே”
என்றும்,
“பெரியார் ஈ.வெ.இரா, ஒரு குமுகாயச்
சீர்திருத்தக்காரர், பகுத்தறிவு வழிகாட்டி. அவர்
ஒரு பேராசிரியரோ, அரசியல் வல்லுநரோ
அல்லர். தமிழரின் குமுகாய அமைப்பைச்
சீர்திருத்தியவர் என்பதற்காகத் தமிழையே
சீர்த்திருத்தத்தொடங்குவது அவர் அறியாமை
யாகும்.”
என்றும் பாவலரேறு எழுதிய கருத்துகளில் பெரியார் கருத்து செலுத்தி கவனிக்கவும் செய்தார்.
எனவே பெரியாரை அவரின் குமுகத் தொண்டுகளை எந்த அளவு பாவலரேறு புகழ்ந்தாரோ, அந்த அளவு அவரின் மொழியியல் பார்வையில் இருந்த சில குறைபாடுகளைக் கடுமையாகவும் திறனாய்ந்திருக்கிறார்.
எனவே, பாவலரேறு அவர்கள் பெரியாரைப் பற்றி எழுதி யவை, ஏதோ உணர்வு வயப்பட்டு எழுதியவையன்று.
இந்நிலையில் பாவலரேறு மதித்திருந்த பெரியாரின் தொண்டும், பெரியாரின் கருத்துகளும் தமிழனத்திற்கும், தமிழ் நாட்டிற்கும் பயனற்றவை என்றும் அவை தமிழ்த்தேசக் கருத்தையே சிதைப்பன என்றும் சிலர் கருத்துக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
அத்தகையோர் அவ்வாறு கருத்துக் கொண்டிருப்பதோடு, பெரியாரை இழிவுபடுத்திப் பேசிடவும் செய்கின்றனர்.
பெரியார் பிறப்பால் கன்னடர் என்றும், எனவேதான் அவர் தமிழர், தமிழ்நாடு என்று பேசாமல், திராவிடர் – திராவிட நாடு என்று பேசினார் என்றும், அவர் பேசிய வகையில் திராவிடர் என்கிற கருத்துதான் தமிழர்களை எழுச்சி கொள்ள விடாமல் செய்து விட்டது என்றும், எனவே தமிழர்களுக்கு இந்தியம் பகை போலவே திராவிடமும் பகையாக இருக்கிறது என்றும், இந்தியத்தை வீழ்த்த  வேண்டுமானால் முதலில் திராவிடத்தை வீழ்த்த வேண்டும் என்றும் விரிவாகக் கருத்து கூறுகின்றனர்.
இவ்வகைக் கருத்துடையோர் முன்வைக்கிற செய்திகள் குறித்து சிலவற்றைச் சற்று விரிவாகப் பார்க்க வேண்டியுள்ளது.

முதலில் திராவிடம் என்று ஒரு மொழி இல்லை. திராவிடம் என்கிற மொழியிலிருந்துதான் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் போன்ற மொழிகள் பிறந்து வந்தவையாகக் கருதுவது பிழையான கருத்து.
தமிழிலிருந்தே சமசுக்கிருத பிராகிருத மொழிகளின் கலப்புகளால் மற்ற மொழிகள் எல்லாம் படிப்படியாகத் திரிந்து வேறு
வேறு மொழிகளாயின.
தமிழே தமிழ்நாடு முழுக்க மட்டுமன்று, இன்றைக்கு இந்தியா என்று அழைக்கப்படுகிற அன்றைய நாவலந் தீவில் இருந்த பல நாடுகளிலும் பேசப்பட்ட மொழியாக இருந்தது.
பிராகிருதத்தை வடபால் தமிழிய மொழி என்று மொழியியல் அறிஞர் பாவாணர் குறிப்பிடுவார்.
பிராகிருதம்  என்கிற மொழியே அசோகர் காலங்களில் எல்லாம் வட நாடுகளில் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வந்திருக்கிறது. அசோகர் காலங்களில்  சமசுக்கிருதம் இல்லை. அசோகர் ஆண்ட காலத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் அனைத்தும் பிராகிருதத்தி லும்,  பாலியிலிலுமே உள்ளன. அசோகரின் காலம் கி.மு. 360 அளவிலானது.
வடநாடுகளில் கி.பி. 150 ஆம் ஆண்டிற்கு முன்பாகச் சமசுக்கிருதம் எழுத்தளவில் இருந்ததற்கான பதிவுகள் இல்லை.
இவை ஒருபுறம் இருக்க, பழைய நாவலந்தீவுக்குரிய நாடுகளில் பேசப்பட்ட தமிழ் படிப்படியாக சமசுக்கிருதம் உள்ளிட்ட ஆண்டை மொழிகளின் கலப்பால் வெவ்வேறு மொழிகளாகத் திரிந்தன.
எனவே மூல மொழியான தமிழ் தென் பகுதியில் தன்னைத் தற்காத்துக் கொள்ளுகிறபடி இருந்தது.
பாண்டிய, சோழ, சேரப் பேரரசுகளின் காலங்களுக்குப் பிறகு களப்பாளர்கள், பல்லவர்கள், கன்னட, தெலுங்கு நாயக்கர்கள், மராட்டியர்கள், முகலாயர்கள், ஆங்கிலயர்கள் எனத் தொடர்ச் சியாகப் பலரின் படையயடுப்புகளால், ஆட்சிகளால் தமிழ் ஆட்சி மொழி நிலையை இழந்தது. இருப்பினும் வெகு மக்கள் மொழி யாகவே நீடித்தது. பழந்தமிழ் இலக்கியங்கள் தமிழைக்காத்தன.
தமிழ் மொழியைப் பிற மொழியினர் தங்கள் மொழிப் பலுக்கலுக்கு   ( உச்சரிப்புக்கு ) ஏற்பவே சுட்டினர்.
ஆங்கிலேயர் எப்படி டாமில் (வீழிதுஷ்யி) ‡ என்கின்றனரோ, பிரெஞ்சுக்காரர்கள் எப்படி டமுல் என்று நம் தமிழ் மொழியைக் குறிப்பிடுகின்றனரோ
அப்படியே களப்பாளர்கள் (களப்பிரர்கள்) நம்முடைய தமிழ் மொழியை  ‘த்ரமிள்’என்றே குறிப்பிடலாயினர்.
அவர்களின் வாய்மொழிக்கு அவ்வாறே அவர்களால் பலுக்க (உச்சரிக்க) முடிந்தது.
அவ்வகையிலேயே கி.பி.460களில் அவர்கள் அமைத்த ‘சங்கத்’திற்குத் ‘த்ரமிள சங்கம்’என்று பெயரிட்டனர்.

ஆக, தமிழே – த்ரமிள – த்ரமிட – திராவிட என்றவாறு பிராகிருத, சமசுக்கிருத மொழியாளர்களால் குறிப்பிடப்பட்டது.
ஆக – திராவிடர் – என அவர்கள் தமிழரையே குறிப்பிட்டனர்.
அவ்வகையில் ஆரியரல்லாத, ஆரியப் பார்ப்பனியரல் லாதவர்கள் ‘திராவிடர்கள்’ என்பதாக அவர்களால் அறியப் பெற்றனர்; அவர்களின் இலக்கியங்களில் பதிவு செய்தனர்.
ஆனால் ‘கால்டுவெல்’ எனும் ஐரோப்பிய மொழியியல் அறிஞர் எழுதிய ‘ஒப்பிலக்கண’ஆய்வு நூலில் தமிழும், தெலுங்கும், கன்னடமும், மலையாளமும்,  துளுவும் ஆரியமல்லாத திராவிட மொழிகள் என ஆய்ந்து எழுதினார். ஆரியக் குடும்ப மொழிகளுக்கு மாறான தனித்தக் குடும்ப மொழிகளாகத் திராவிட மொழிக்குடும்பம் உள்ளதாகக் காட்டினார்.
இக்காலங்களில் அரசியல் அதிகாரத்தால் ‘பிரித்தானிய இந்தியா’ என்கிற ஓர் அரசதிகாரத்தை உருவாக்கிய ஆங்கிலேயர்கள் தங்கள்ஆட்சி வாய்ப்புக்காக மும்பய், கொல்கத்தா, சென்னை-  ஆகிய தலை மாநிலங்களை உருவாக்கினர்.
ஆங்கிலேயரின்  பிரித்தானிய இந்தியாவில், இந்தி சமசுக் கிருதத்தை, ஆரியப் பார்ப்பனியர் தங்கள் ஆளுமையோடு, உயர்த்திப் பிடித்தனர். அம்மொழிகளின் ஆண்டை வகுப்பினரைத் தம்மோடு இணைத்துக்கொண்டே பாரதம் ‡ இந்தியம் எனும்  கருத்துருவாக் கங்களை நாடாக – அரசாக – பண்பாடாக மக்களினமாக உருக்காட்டி வளர்த்தனர்.
அவர்களின் அப்போக்கை எதிர்த்து ஆரியத்திற்கு மாற்றாய் அன்றைக்குச் சென்னைத் தலைமாநிலத்தை (மெட்ராசுபிரசிடென் சியை) ஆண்ட ஆண்டை வகுப்பினரின் அடையாளப் படுத்தமே திரா விடர், திராவிடர் நாடு என்னும் அடையாளங்களாக இருந்தன.
சென்னைத் தலைமாநிலத்திற்குள் (மெட்ராசு பிரசிடென் சிக்குள்) தமிழர்கள், தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் என நான்கு மொழிவழி இனத்தினரும் உள்ளடங்கியிருந்தனர். எனவே அவர்கள் ஒரு மொழியினத்திற்குரிய பெயர் அடையாளத்தோடு அடையாளப்படுத்தப்படாமல் ‡ ஆரியப் பார்ப்பனியத்திற்கு எதிரான ‘திராவிடர்’என்றவாறும் அடையாளப்படுத்தப்பட்டனர்.
அன்றைக்குச் சென்னையே தலைநகராக இருந்ததால், சென்னை – சென்னையைச் சுற்றிய நிலவுடைமையர்கள் பெரும் பாலும் தெலுங்கு ரெட்டியார், நாயக்கர்களாக இருந்ததால் அவர்களைச் சார்ந்தோரே அரசியலில் ஆளுமை செய்தனர்.
அன்றைய நயன்மைக் கட்சி – பிராமணரல்லாதார் இயக்கமாக அன்றைக்கிருந்த ஆரியப்பார்ப்பனர்களின் அரசியல், கல்வியியல், ஆட்சியியல் ஆளுமைகளை எதிர்த்துத் தொடங்கப்பட்டது. அதன் அடையாளம் பிராமணரல்லாதார் இயக்கம் என்பதோடு இருந்தாலும், அதில் பெரும்பான்மையினர் தெலுங்கு ஆளுமை நிலவுடைமைச் சாதியினரே தலைமைப் பொறுப்புகளில் இருந்தனர். அவர்களுக்கு மட்டுமன்று – ஐதராபாத் நிசாம் ஆளுமையின் கீழ் உள்ளடங்கித் தெலுங்கானா வரையிலிருந்த தெலுங்கர்கள் -ஆந்திர வணிக நிலவுடைமையாளர்கள் அனைவருக்கும் தெலுங்கானா எனத் தனித்த ஓர் அரசுரிமை அமைக்க வேண்டுமென்ற எண்ணத்தோடேயே இருந்தனர்.
அதே போல் அன்றைக்குச் சென்னைத் தலை மாநிலத்தில் உள்ளடங்கியிருந்த, கன்னட வாழ்பகுதியினரும் மைசூர் தனி ஆட்சியக (சமசுத்ததான)த்தோடு சேர்ந்து தங்களுக்கான தனி அரசுரிமை அமைக்க வேண்டுமான எண்ணத்தோடேயே இருந்தனர்.
மலையாளத்தினரும் அப்படியே கொச்சி,  திருவிதாங்கூர் ஆட்சியக (சமசுத்ததான)த் தோடு இணைந்து தங்களுக்கான தனி அரசுரிமையை உருவாக்கும் எண்ணத்தோடேயே இருந்தனர்.
மொழிவழி மாநிலக் கருத்து வலுப்பட வலுப்பட 1956 ‡இல் நடைபெற்ற மொழி மாநிலப் பகுப்புக்குப் பிறகு அவர்களெல்லாம் தங்கள் தங்கள் மொழி மாநிலத்தினர்களாக அன்றைய சென்னைத் தலை மாநிலத்திலிருந்து பிரிந்து சென்று தங்கள் மொழி மாநிலங்களை அமைத்துக் கொண்டனர். அப்படிப் பிரிந்து சென்று தனி மாநிலங் களை அமைத்திட்டபோது, தமிழர்கள் பெரும் பகுதி வாழ்ந்த நிலப் பரப்புகள் சிலவற்றையும் தங்கள் பகுதிகளோடு இணைத்துக் கொள்ளவும் செய்தனர்.
1956 வரை இந்த நிலைகள் நீடித்தன.
அதற்கு முன்னர் நயன்மை (நீதி)க்கட்சி ஆட்சியும், அதன்பின்னர் 1936 தொடங்கிப் பேராய ( காங்கிரசு)க் கட்சி ஆட்சியும் நடைபெற்றது. 1936 இல் இந்தித் திணிப்பு தொடங்கியது. இந்திப் பரப்பல் அவை (பிரச்சார சபா)யைத் தொடங்கி நடத்துவதற்கென்றே காந்தி பலமுறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்றார்.
இந்தி மொழியையும் ஆரியப் பண்பாட்டையும் இராசாசி 1938 இல் கட்டாயமாகத் திணித்தார். அதை எதிர்த்துத் தமிழ்க்காப்பு முயற்சியை முன்னெடுத்த மறைமலையடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்கள் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடினர். இந்தித் திணிப்புப்போராட்டம் இந்திய எதிர்ப்புப் போராட்டமாகவும் வளர்ச்சி கொண்டது.
ஏற்கனவே ஆரியப் பார்ப்பனியத்தை இந்திய ஆளுமைத் தன்மையோடு இணைத்து அடையாளப்படுத்திப் போராடி வந்த பெரியார் தமிழறிஞர்களின் போராட்டங்களோடு இணைந்தார். இந்தியை எதிர்ப்போம் என்றும் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்றும் முழக்கமிட்டார்.
தமிழர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் மொழியளவில் வலுப்பட்டது போன்று இந்தியத்தை எதிர்த்து வலுப்படவில்லை.
அது ஒருபுறம் எனில் மறுபுறம் ஆரியப் பார்ப்பனியத் திற்குரியதான இந்தியத்திடமிருந்து ஆரியரல்லாத திராவிடர்களுக் குரிய நாட்டைத் தனி நாடாக்கும் சிந்தனையே பெரியாரிடம் தொடக்கத்தில் தோன்றி இருந்தது.
1940 இல் திருவாரூரில் நடந்த தென்னந்திய நலவுரிமைக் கழக மாநாட்டின் தீர்மானத்தில்,
‘திராவிடர்களுடைய கலை நாகரிகம்
பொருளாதாரம் ஆகியவை முன்னேற்றமடை
வதற்கும், பாதுகாப்பதற்கும் திராவிடர்களின்
தேசமாகிய சென்னை மகாணம் இந்திய
மந்திரியின் நேர்பார்வையின் கீழ் ஒரு
தனிநாடாகப் பிரிக்கப்பட வேண்டும்.’
என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து 1944 – சேலத்தில் திராவிடர் கழகத்தின் தொடக்க மாநாட்டுத் தீர்மானத்தில் :
“திராவிடர் கழகத்தின் முக்கியக் கொள்கைகளில் திராவிட நாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம் மத்திய அரசாங்க நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும் நேரே பிரிட்டீசு செகரட்டரி ஆப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதுமான ஒரு தனி நாடாகப் (றீமிழிமிe) பிரிக்கப்பட வேண்டியது என்ற கொள்கையை முதற் கொள்கையாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.” –  என்றும் கூறியிருந்தார்.
இந்தத் தீர்மானங்கள் வழி ஒரு தேசத்தில் விடுதலை எத்தகையது எனப்பெரியார் விளங்கிக் கொண்டார் என்ற ஆய்வு ஒருபுறம் இருக்க, அவர் திராவிடர்களின் தேசமாக – நாடாகக் கருதியது அன்றைய சென்னைத் தலை மாநிலத்தையே என்பதைத் தெளிவாக அறியலாம்.
மேலும் – 1956 இல் மொழி வழி  மாநிலங்கள் பிரிந்து போகிற படியாகத் தெலுங்கு, கன்னட, மலையாள, மாநிலங்கள் பிரிந்து போய்விட்டநிலையில்,பெரியாரின்கருத்துகள் மிக முகமையானவை.
“கன்னடியருக்கும், மலையாளிக்கும் இனப்பற்றோ, சுயமரியாதையோ இல்லை ; மத்திய ஆட்சிக்கு அடிமையாக இருப்பது பற்றி அவர்களுக்குச் சிறிதும் கவலையில்லை.மேலும், சென்னை மாகாணத்தில் 7 இல் ஒரு பாகத்தினராக இருந்து கொண்டு, தமிழ்நாட்டில் அரசியல், பொருளாதாரம், உத்தியோகம் முதலியவற்றில் 3 இல் 2 பாகத்தை அடைந்து கொண்டு, இவை கலந்திருப்பதால் – நம் நாட்டைத் தமிழ்நாடு என்று கூட சொல்வதற்    கிடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டிருக்கின்றனர். அதனால் இவர்கள் சீக்கிரம் பிரியட்டும் என்றே கருதி வந்தேன். அந்தப்படியே பிரிய நேர்ந்து விட்டார்கள். அதனால் நான் இந்தப்பிரிவினையை வரவேற்கிறேன்.”
என்றும், “திராவிட நாடு என்பது இனித் தமிழ்நாடு என முழு சுயேச்சை விடுதலைக்குப் பாடுபட வேண்டும்” என்றும்,
“ஆந்திரர், கர்நாடகர், மலையாளிகள் பிரிந்துபோன பின்பும்கூட மீதியுள்ள யாருடைய மறுப்புக்கும் இடமில்லாத தமிழகத்திற்குத் தமிழ்நாடு  என்ற பெயர் கூட இருக்கக் கூடாது என்று, அந்தப் பெயரையே மறைத்து, ஒழித்துப் பிரிவினையில் ‘சென்னை நாடு’ என்று பெயர் கொடுத்திருப்பதாகத் தெரியவருகிறது. இது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும். எந்தத் தமிழனும் இதைச் சகிக்க முடியாது.
இதைத் திருத்தத் தமிழ்நாட்டு அமைச்சர்களையும், சென்னை, டில்லி சட்டசபை கீழ் மேல்சபை உறுப்பினர்களையும், மற்றும் தமிழ்நாட்டில் உள்ள புலவர்கள், பிரபுக்கள், அரசியல், சமுதாய இயல் கட்சிக்காரர்களையும் வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ், தமிழ்நாடு என்கின்ற பெயர் கூட இந்நாட்டிற்கு, சமுதாயத்திற்கு இடமில்லாத நிலைமை ஏற்பட்டு விடுமானால் பிறகு என்னுடையவோ, எனது கழகத்தினுடையவோ, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு எதற்காக இருக்க வேண்டும்.”
– என்றும்  பெரியார் ‘திராவிடர்’ – என்கிற கருத்தை ஆரியப் பார்ப்பனர் அல்லாதவர் என்கிற அடிப்படையிலேயே கொண்டி ருந்தார் என்பதைத் தெளிவுபட உணரலாம்.
1956க்குப் பின்னர் ‘தமிழ்நாடு தமிழருக்கே’என்று தம் வாழ்நாள் இறுதி வரையிலும் பெரியார் முழங்கவும், ‘விடுதலை’ நாளிதழின் தலைப்பில் அச்சிட்டுப் பரப்பிடவுமே செய்து வந்தார்.
‘தமிழ்நாடு தமிழருக்கே! ’ என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள் என்றும், வில்லை (பேட்ச்) அணிந்து கொள்ளுங்கள் என்றும் சொன்னார்.
அவரின் போராட்டங்கள், போராட்ட நடைமுறைகள் சிலவற்றில் நிறைவின்மை ஒருபுறம் இருக்க, அவரின் தமிழ்நாடு விடுதலை பற்றிய கருத்திலும் ஆரியப் பார்ப்பனரல்லாத திராவிடர் இனம் பற்றிய கருத்திலுமான செய்திகளில் அவரையோ, அவர் கருத்துகளையோ பகையாகக் கருதுவதற்குரிய செய்திகள் இருப்பதாக அறிய முடியவில்லை.
பெரியாரின் கருத்துகளும், செயல்களும் போதுமானவை என்று சொல்லிவிட இயலாது. எனவே அவற்றைச் செழுமைப் படுத்திட வேண்டும், மேலும் வளர்த்தெடுத்திட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.
ஆனால் பெரியார் கருத்துகளைப் பகைமைக் கருத்துகள் என்றும், நச்சுக் கருத்துகள் என்றும் இழித்துரைப்பதும், எதிர்ப்பதும், ஆரியத்தை, ஆரியப்பார்ப்பனியத்தை வளர்ப்பதே ஆகும்.
தமிழ்நாடு விடுதலை என்பது இந்தியத்தை, வல்லரசியத்தை எதிர்த்துப் போராடுவதன் வழி அவற்றின் அதிகாரங்களை வீழ்த்துவதன் வழி மட்டுமே வெல்லப்படக்கூடியது.
அவ்விடுதலைப் போராட்டத்திற்குரிய போராட்டத் தலைமை ஆற்றல்கள், உழவர்கள், தொழிலாளர்கள், ஒருங்கிணைந்த உழைக்கும் மக்களே ஆவர். அவர்களுக்கு ஆதரவாய், மாணவர்கள், இளைஞர்கள், நடுத்தட்டு வகுப்பினர், பெண்கள், வணிகர்கள், சிறு முதலாளிகள் எனப் பலதரப்பினரும் இருந்திட  வேண்டியிருக்கிறது.
தமிழ்த்தேச விடுதலை அரசியலை ஏற்றுக் கொள்ளுகிற ஆதரவுக்குரிய ஆற்றிலினராய் குறிப்பிடத்தக்க நிலையில் முன்னணியினராய் இருப்பவர்கள் அம்பேத்கரிய, பெரியாரிய இயக்கத் தோழர்களும் ஆவர். அவர்கள் அம்பேத்கர் மீதும், பெரியார் மீதும் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் மீதும் பற்றுள்ளவர்கள்.
அவர்களிடம் போய் பெரியார் பிறப்பால் கன்னடர், எனவேதான் திராவிடம் பேசினார் என்றும், தமிழன் என்று பேசவில்லை என்றும், தமிழ்நாட்டின் நிலங்களைத் தெலுங்கர்களும், கன்னடர்களும் சுரண்டிப்பறித்துக் கொள்ள வழிவகுத்திட்டார் என்றும், தமிழை இழிவுபடுத்தினார் என்றும் 1965 இன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும், இன்னும் பலப்படியாகவும் இழித்தும் பழித்தும் உரைப்பது தமிழக வரலாற்றையும் பெரியாரையும் முறைப்படி நிரல்படுத்தி அறியாத அறியாமைப் போக்கு என்பதாகவே எண்ண வேண்டியுள்ளது.
அத்தகையவர்கள் தமிழக விடுதலை அரசியலைப் பொறுப்புடன் உணர்ந்து அதற்குரிய எதிரிகளான இந்தியத்தையும், வல்லரசியத்தையும் தனிமைப்படுத்தி எதிர்த்து வீழ்த்திடும் அரசியல் தெளிவு கொண்டியங்காமல், நண்பர்களாக அணிதிரட்டப்பட வேண்டியவர்களையே பகைவர்களாக்கி எதிர்க்கும் தெளிவற்ற நடைமுறை உள்ளவர்களாக இருக்கின்றனர்.
அத்தகைய தெளிவற்ற நிலையிலிருந்து அவர்கள் மாறி,
“அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்”
என்று திருவள்ளுவப் பேராசான் சொல்லுகிற வகையில் பகைவனும் உள் நுழைந்து அழிக்க இயலாத வகையில் அறிவு துன்பங்களை நீக்கும் கருவியாகச் செயல்படும்  என்பது போல்,
தமிழ்த்தேச எதிரிகளையும், நண்பர்களையும் சரியாகத் திறம்பட வகைப்படுத்தி நிறுத்திப் போராடுகிற அறிவு ஆற்றலைத் தமிழ்தேச இயக்கத்தினர் பெற வேண்டும்.
அத்தகைய கருத்தோட்டத்திலேயே பாவலரேறு ஐயா அவர்கள் தமிழ்த்தேச முதன்மை எதிரிகளாக இந்தியத்தையும், வல்லரசியத்தையும் கணித்ததும் செயல்பட்டதோடு, தமிழகத்தில் இயங்கிய பெரியார் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களையும், கருத்துகளையும் வகைப்படுத்தி, நட்பாற்றல்களாக நெறிப்படுத்தி இயக்கினார். அவ்வகையில் பெரியாரைப் பற்றிய  பாவலரேறு அவர்களின் கருத்தோட்டங்கள் எவ்வாறு இருந்தன என்பதை அறிய அவரின்  ‘பெரியார்’ நூலைப் படித்திடவும், பகுத்தறிந்திடவும், பயனாக்கிக் கொள்ளவும் வேண்டும்.

நூல்: ‘பெரியார்’
நூலாசிரியர் : பாவலரேறு பெருந்சித்திரனார்
வெளியீடு: மன்பதை பதிப்பகம்,
பாவலரேறு கணினியகம் வேளச்சேரி முதன்மைச் சாலை, மேடவாக்கம் கூட்டுச்சாலை, சென்னை – 600100  விலை : உருவா 50/-

நன்றி: உழைக்கும் மக்கள் தமிழகம்

எனது வலைப்பதிவுகள்
நாளை விடியும் www.naalaividiyum.blogspot.in
பெரியாரியல் www.periyaariyal.blogspot.in
அம்பேத்கரியம் www.ambethkariyam.blogspot.in
பெண்ணியம் www.penniyakkural.blogspot.in
திருநங்கையர் www.thirunangaiyar.blogspot.in
சோதிடப்புரட்டு www.jothidamosadi.blogspot.in
தமிழ்ப்பெயர்கள் www.thamizhpeyargal.blogspot.in
அணு உலை எதிர்ப்பு www.anuulaiethirppu.blogspot.com
தோழமைப்பதிவர்கள் www.thozhamaippathivargal.blogspot.com
சாய்பாபா மோசடிகள் www.saibabamosadigal.blogspot.in
Atheism www.atheismweb.blogspot.in
கடவுள் மறுப்பு www.kadavulmaruppu.blogspot.in
அறிவுநூல்கள் www.arivunoolgal.blogspot.in
அறிவுத்தேடல் www.arivuththaedal.blogspot.in
பாரதி – யார்? www.bhaarathiyaar.blogspot.in
சோதிட மோசடிகள் www.jothidamosadi.blogspot.in
தலித் குரல் www.dalithkural.blogspot.in
தஸ்லிமா நஸ்ரின் www.taslimaanasreen.blogspot.in
பெரியார் சிந்தனைகள் www.periyaarsinthanaigal.blogspot.in
தமிழுணர்வு www.thamizhunarvu.blogspot.in
மனிதநேயம் www.makkalthondu.blogspot.in
சிந்தனைகள் www.sinthanaiyalargal.blogspot.in
புராண ஆபாசங்கள் www.puranappurattugal.blogspot.in
பொன்மொழிகள் www.ponmozhigal.blogspot.in
அறிவுச்சுடர் www.arivuchchudar.blogspot.in

ஆசிரியர்: நாளைவிடியும் இருதிங்களிதழ்

மலைக்கோயில் தெற்கு

திருச்சி

மின்னஞ்சல்: arasezhilanpr@gmail.com
முகநூல்:     Arasezhilan Rathinam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *