Nachimuthu Ayya
தமிழ்த்திரு. நாச்சிமுத்து ஐயா
தேவத்தூர்
ஒட்டன்சத்திரம் தொகுதிச் சட்டப் பேரவை உறுப்பினரும் தேவத்தூர் மணிமேகலை-இளங்கோ மேல்நிலைப்பள்ளி நிறுவனரும் இவ் இணையத்தளம் அமைந்திடக் காரணரும் புரவலரும் ஆகிய மானமிகு நா.நாச்சிமுத்து ஐயா அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளைத் தமிழன்பர்களுக்குத் தருவதில் யாம் பெரிதும் மகிழ்கின்றோம்!
1926இல் பழனிக்கு அண்மையிலுள்ள தேவத்தூரில் நாச்சிமுத்து-பழனியம்மாள் இணையரின் செல்வ மகனாகப் பிறந்தவர். தொடக்கநிலைக் கல்வி உள்ளூரிலும் உயர்நிலைக் கல்வி பழனி நகரவை உயர்நிலைப் பள்ளியிலும் வாய்க்கப் பெற்றார். உயர்நிலைப் பள்ளியில் மாணவர் பேரவைச் செயலாளராக இருந்தபோது பொதுவுடைமை இயக்கத் தலைவர்களுள் ஒருவரான தோழர்.சங்கரய்யா அவர்களின் தொடர்பு கிடைத்தது. என்றாலும் திராவிட இயக்கத்தின்மீதுதான் நாச்சிமுத்து ஐயாவுக்குப் பற்றும் பிடிப்பும்!
இளம் பருவத்தில் தம் தோட்டத்திற்கு முடிதிருத்துவதற்காக வரும் ‘பித்து நாவிதர்’ தமக்குத் திருக்குறளை அறிமுகப்படுத்திப் படிக்க வைத்ததையும், தந்தை பெரியாரின் இதழ்களான ‘குடியரசு’ ‘பகுத்தறிவு’ முதலியவற்றைக் கொண்டுவந்து கொடுத்துப் படிக்கச்செய்து பகுத்தறிவாளனாக்கிய தாராபுரம் ஆறுமுகம் அவர்களையும், தேவத்தூரில் பெரியார் பற்றாளர்களாக விளங்கிய கோபால்சாமி, கருப்பண்ணன் ஆகியோர் தன் அறிவுப் பசிக்குத் தீனிபோட்டு வளர்த்ததையும் இன்றும் பசுமையாக நன்றியுடன் நினைவுகூர்கிறார்!
ஏழாம் வகுப்புப் படிக்கும்போது மறைமலையடிகளாரைப் பற்றி அறிந்து அவரது நூல்களைத் தேடிப்பிடித்துப் படிக்கத் தொடங்கினார். பழனியில் படித்தபோது, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் வெங்கிடுசாமி, காணியாளர் கண்ணையன், அவர் தம்பி சின்னப்பன், இராமபட்டணம்புதூர் வழக்கறிஞர் இராமச்சந்திரன் ஆகியோர் நாச்சிமுத்து ஐயாவுடன் நெருங்கிப் பழகிய தமிழுணர்வுப் பகுத்தறிவாளர்கள்.
ஐயா அவர்கள், பள்ளிப் படிப்பின்பின் மதுரை அமெரிக்கன் கல்லூரி இடைநிலை வகுப்பில் கணிதப் பிரிவில் சேர்ந்தார். அவர் விரும்பிய பாடம் வரலாறு; ஆனால் அவரது ஆசிரியர் சேம்சு என்பார் அவரைக் கணக்குப் பிரிவில் சேர்த்துவிட்டுப் போய்விட்டார். அக் கல்லூரியில் ஆறுமுகம் என்ற திராவிடர் கழக நண்பரின் தொடர்பால் பகுத்தறிவு இயகத்தின்மீது மிகுந்த ஈடுபாடு கொண்டார்.
கல்லூரியில் படித்த காலத்திலும் சங்கரய்யாவுடன் நட்பு நீடித்தது; பொதுவுடைமை இயக்கம் வளர்ந்துகொண்டிருந்த காலம் அது. மண்ணின் மக்களைப்பற்றிக் கவலைப்படாமல், ‘சர்வதேசியம்’ பேசிய பொதுவுடைமை இயக்கமோ ‘இந்திய தேசியம்’ பேசிய பேராயக் கட்சியோ இவரை ஈர்க்க முடியவில்லை. ஆனால் தமிழ்மக்களைப்பற்றிப் பேசிய திராவிடர் இயக்கத்தின்மீது ஆழ்ந்த பிடிப்பும் பற்றும் ஏற்பட்டது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரிடத்தில் தனி மதிப்பு ஏற்பட்டது.
கணக்குப் பாடம் உயர்கல்விக்கு வழிவகுத்துக் கொடுக்காமையால் திராவிடர் இயக்க உணர்வுகளோடு ஊர்வந்து சேர்ந்தார். முதல் வேலையாகத் தம் தோட்டத்திற்குள் இருந்த ‘பிள்ளையார்’ கோயிலை அப்புறப்படுத்தினார்.
எதனையும் அறிவியல் மனப்பான்மையோடு நோக்குதல் வேண்டும் என்ற கருத்துடையவர் நம் நாச்சிமுத்து ஐயா. உழவுத் தொழிலில் கவனம் செலுத்தியதோடு, பாசிபடிந்த பழமையில் ஊறிக்கிடந்த வேளாண் பெருமக்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்ட விரும்பினார்; வேளாண்மையை அறிவியல் மயமாக்கத் தொடங்கினார். இப் பகுதியில் முதன்முதலாக எந்திரக் கலப்பையால் நிலத்தை உழுது பண்படுத்திக் காட்டினார்; நீர் இறைத்திட மின் விசைப்பொறியைப் பயன்படுத்தினார். ஒட்டன்சத்திரத்தில் மின் நீரிறைபொறி அங்காடி ஒன்றைத் தாமே தொடங்கி நடத்தினார்.
மழைவளம் குன்றியதால், உழவுத் தொழில் நீரின்றி நலியத் தொடங்கியது; உழவர்கள் கிணறுகளை ஆழப்படுத்தியும் புதிய கிணறுகளை வெட்டியும் கடன்பட்டுத் தொல்லைப்பட்டார்கள். இத்தகையோரை வேறு தொழில்களில் ஈடுபடுத்த எண்ணினார். ‘கிணறு வெட்டிக் கெட்டுப் போகாதே’ ‘எருமை மாடுகளை நம்பி ஏமாந்து போகாதே’ என்பன போன்ற துண்டறிக்கைகளையும் சிறு விளக்க அறிக்கைகளையும் அச்சிட்டு மக்களிடையே பரப்பினார்; தக்க பிற தொழில்களில் ஈடுபட ஆற்றுப்படுத்தினார்.
உள்ளூரில் உறவுக்காரப் பெண்ணை எளிய முறையில் பார்ப்பனர் இல்லாமல் திருமணம் செய்துகொண்டார்; மணிமேகலை, இளங்கோ என இவர்க்கு இரு குழந்தைகள்.
இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்றினார். இவரது ஆளுமைத் தோற்றத்தையும் அணுகுமுறையையும் கண்டு எண்ணற்ற இளைஞர்கள் தி.மு.க.வில் சேர்ந்தனர். தி.மு.க.வில் அறிஞர் அண்ணாவுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். அக் கட்சி நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்றார். 1964-65ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஒரு மாதம் சிறையிலிருந்தார்.
1962 பொதுத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்; 1967,1971 இரு பொதுத் தேர்தல்களிலும் வெற்றிபெற்றுச் சட்டப் பேரவை உறுப்பினராகிச் சிறந்த முறையில் தொண்டாற்றினார். இக் காலத்தில் தந்தை பெரியாரோடும் ஆசிரியர் வீரமணியோடும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார்.
ஐயா அவர்கள் பாவாணர் நூல்களை விரும்பிப் படிப்பார்; தம்மைப் பார்க்க வருவோரிடமெல்லாம் குழந்தைகளுக்கு நல்ல தமிழில் பெயரிடுமாறு கூறுவார்; தனித்தமிழ்த் தாளிகைகள் இவரது அறையை எப்பொழுதும் அழகுபடுத்திக்கொண்டிருக்கும்; பகுத்தறிவு இதழ்களும் இயற்கை நெறிசார்ந்த நலவாழ்வு இதழ்களும் நூல்களும் நிறைந்து கிடக்கும்; தம்மைக் கண்டுபேச வந்து செல்வோர்க்கு அவரவர் நிலைக்குத் தக்க பயனுள்ள நூல்களைக் கொடுத்தனுப்புவார்; திருமணமக்களுக்கு நூல்களையே அன்பளிப்பாகக் கொடுப்பார்; பள்ளி விழாக்களில் நூல்களை மட்டுமே பரிசுவழங்குவது இங்கு மாறாத நடைமுறை ஆகும்.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோரிடத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டவர்; இவர்களைத் தேவத்தூருக்கு அழைத்துவந்து பெருமைப்படுத்தியவர்.
தேவத்தூர்ச் சுற்றுவட்டாரத்தில் உயர்நிலைப் பள்ளி எதுவும் இல்லாததால், அப் பகுதி மக்களின் கல்வி நலனைக் கருத்தில்கொண்டு, 15.07.1968இல் தேவத்தூரில் மணிமேகலை இளங்கோ உயர்நிலைப் பள்ளியை நிறுவினார்; அஃது இன்று மேல்நிலைப் பள்ளியாகத் திகழ்கிறது. பைந்தமிழும் பகுத்தறிவும் செழித்து வளரும் பண்பட்ட நிலமாக விளங்கும் அப் பள்ளிக்குத் தமிழகத்தின் மொழி இன உணர்வுசான்ற தலைவர்களும் அறிஞர்களும் கலைஞர்களும் வருகைபுரிந்து சிறப்பித்துள்ளனர்.
தூயதமிழ் நல்லறிஞர்களான இரணியன், வேலிறையன் ஆகியோர் அப் பள்ளியில் பணியாற்றும் வாய்ப்பு நேர்ந்தபோது தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களை அறிமுகப்படுத்தினர்; அதைத் தொடர்ந்தே தாம் தமிழ்க்காப்பு வகையில் துணைநிற்க முடிந்தது என்பதை ஐயா மகிழ்வுடன் நினைவுகூர்கிறார்.
தமிழர்தம் குழந்தைகள் தாய்மொழியாகிய தமிழ் வாயிலாகவே கல்வி பெற வேண்டும் என்பதிலும் தமிழே தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாகவும் அறமன்ற மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் இருக்க வேண்டும் என்பன போன்ற கொள்கைகளிலும் பிடிப்பு மிக்கவர். புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசனார், பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஈழத்துப் பாவலர் காசி ஆனந்தனார் ஆகியோரின் பாடல்களை படிப்பதும் பலர்க்கும் எடுத்துரைப்பதும் இவர்க்கு மகிழ்வளிப்பன.
தமிழ் மக்களின் இன்றைய உணவுப் பழக்க வழக்கங்கள் அடியோடு மாற வேண்டும், இயற்கை உணவுமுறை பின்பற்றப்படவேண்டும் என்பது இவரது உணவுக் கொள்கை; அவ் வழியில் தன்னையே ஒரு தேர்வுக் களமாக மாற்றிக்கொண்டு தேங்காய், வாழைப்பழம், கொய்யா, மாதுளை போன்ற கனிவகைகளைத் தானும் உண்டு வருவோர்க்கு விருந்தாகவும் வழங்கி மகிழ்பவர்.
திருக்குறளில் ஆழ்ந்த ஈடுபாடும் பற்றும் கொண்டு அதனை நன்கு கற்றுத் தேர்ந்தவர். மருந்து அதிகாரக் குறள்களை அடிக்கடி நினைவூட்டுவார். தமிழன் வீட்டுப் பிள்ளை திருக்குறள் தெரியாமல் வளர்வது நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லதல்ல என்று அறிவுறுத்துவார்.
மணிமேகலை இளங்கோ உயர்பள்ளியின் முன்னாள் மாணவர்களும் ஐயா அவர்களின் நட்புச் சுற்றங்களும் அவரது பெருமையையும் சிறப்பையும் பலரும் அறிந்து முன்மாதிரியாய்க் கொள்ள வேண்டும் என்று விழைந்தனர். 2007இல் ஐயா அவர்களின் எண்பதாம் ஆண்டு நிறைவுப் பாராட்டு விழா எடுத்தனர். முன்னாள் அந்நாள் அமைச்சர்களும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் உயர்பதவியினரும் கலந்துகொண்டனர்; பல்வேறு அரசியல் கட்சிகளின் முன்னவர்களும் தொண்டர்களும் பொதுமக்களும் ஒருங்கே திரண்டு, ஒரு நாள் முழுதும் பரப்பு மிகுந்தமைத்த விழாப் பந்தரின்கீழ் அமைவாய் இருந்து மொழி, இனம், பகுத்தறிவு, வாழ்வியல் கருத்துகளை மாந்தி இன்புற்று எழுச்சிபெற்றுச் சென்றனர்.
‘தமிழன் வீழ்ச்சியடைந்தமைக்கு ஆரியப் பார்ப்பனர்களின் கால்களில் அவன் வீழ்ந்தமையே காரணமாகும்’, ‘நாள், கோள், நேரம் பார்ப்பது போன்ற மூடநம்பிக்கைகளை விட்டொழித்துத் தமிழர் முன்னேற வேண்டும்’, ‘நாளும் கோளும் நற்றமிழர்க்கு ஆகா’, ‘பகுத்தறிவால் பண்படுக’ போன்ற உயர்கருத்துகளைக் கைக்கொண்டும் கொள்ளச்செய்தும் நன்றாற்றி வாழும் ஐயா அவர்கள் அகவை 90ஐ நெருங்குகிறார். இன்னும் நெடிது வாழ்ந்து நம்மை வழிநடத்த வேண்டும்.
கட்டுரையாளர்: பேராசிரியர் முனைவர் ப. காளிமுத்து க.மு.,மெ.மு.